திமுகவில் ஐக்கியமான மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு..!

திமுகவில் ஐக்கியமான மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு..!

திமுகவில் ஐக்கியமான மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு..!
X

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்தது முதல் அவருடன் நெருக்கமாக இருந்தவர் மகேந்திரன். கட்சியில் முக்கிய பொறுப்புகளை பார்த்து வந்த மகேந்திரனுக்கு துணைத்தலைவர் பதவி வழங்கினார் கமல்ஹாசன்.

மகேந்திரன், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான கோவையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

சிங்காநல்லூர் தொகுதியில் மகேந்திரன் தோல்வியடைந்தாலும் 3வது இடம்பிடித்தார். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்தது. இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக மகேந்திரனும் அறிவித்தார். மேலும் கட்சி மீதும் கமல்ஹாசனம் மீதும் மகேந்திரன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் கோபமடைந்த கமல்ஹாசன் அவரை துரோகி என விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகமானது. கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகினார்.

இதன் பின்னர், கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன், திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் மகேந்திரன்.

இந்நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக மகேந்திரனை நியமித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று (7ம் தேதி) வெளியிட்ட அறிவிப்பில், ‘திமுக சட்டதிட்ட விதி: 31 பிரிவு: 19ன் படி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக ஆர்.மகேந்திரன் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இவர் இணைந்து பணியாற்றுவார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it