வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10000 லஞ்சம்.. அரவக்குறிச்சி வட்டாட்சியர் கைது..!
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10000 லஞ்சம்.. அரவக்குறிச்சி வட்டாட்சியர் கைது..!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர், தனது தந்தை இறந்த நிலையில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார்.
அவரிடம் விசாரணை நடத்திய வட்டாட்சியர் எம்.ராஜசேகரன், வாரிசு சான்றிதழ் வேண்டுமானால் 10,000 ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிச்சாமி, இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பழனிச்சாமியிடம் கொடுத்தனர்.
அந்த பணத்தை, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜசேகரனிடம் பழனிச்சாமி கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் ராஜசேகரனை கையும் பணமுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

