எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு!!
எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு!!

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.153 கிலோ தங்க நகைகள், 118 கிலோ வெள்ளி நகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2016 முதல் 2021 காலகட்டத்தில் ரூ.58.23 கோடி (அதாவது வருமானத்தை விட 3,928% அதிகமாக) சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர். கோவையில் 41 இடங்கள் சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள் என எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 58 இடங்களில் சோதனை நடந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், 11.153 கிலோ தங்க நகைகள், 118 கிலோ வெள்ளி நகைகள், கணக்கில் வராத பணம் ரூ.84,00,000 ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ரூ.34,00,000 அளவுக்கு எஸ்.பி.வேலுமணி பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
newstm.in

