கடந்த 7 நாட்களில் மட்டும் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்..!!
கடந்த 7 நாட்களில் மட்டும் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது.
இதைக் கண்காணிக்க மண்டலம் வாரியாக 15 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இவர்கள், சென்னையில் பொது இடங்களில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைப்படிக்கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், திடீர் சோதனை நடத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதன்படி முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 7 நாட்களில் முகக்கவசம் அணியாத 2,340 நபர்களிடம் இருந்து ரூ.11.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

