11-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை.. போக்சோவில் இளைஞர் கைது..!
11-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை.. போக்சோவில் இளைஞர் கைது..!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவி பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாணவியின் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சவுண்ட் சர்வீஸ் அமைக்க பணகுடியை சேர்ந்த இசக்கியப்பன் (20) என்பவர் வந்துள்ளார்.
அப்போது, அந்த மாணவிக்கும் இசக்கியப்பனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பின் காரணமாக, அந்த மாணவி இசக்கியப்பனுக்கு பணம் மற்றும் நகைகளை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நாளடைவில், மாணவிக்கும் இசக்கியப்பனுக்கும் இடையே நெருக்கம் அதிகமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், மாணவியின் வயிற்றில் நீர்க்குமிழிகள் இருப்பதாகவும் வேறு ஒன்றும் பிரச்னை இல்லை எனவும் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாணவிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்படவே நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் மாணவியை சேர்த்துள்ளனர். அங்கு சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே மாணவிக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நாங்குநேரி மகளிர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் மாணவியிடம் விசாரணை நடத்திய போலீசார், மாணவி கர்ப்பத்திற்கு காரணமான இசக்கியப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

