13 லட்சம் காலி பாட்டில்.. கையாள முடியல.. சீக்கிரமா டெண்டர் விடுங்க சாமீ..!
13 லட்சம் காலி பாட்டில்.. கையாள முடியல.. சீக்கிரமா டெண்டர் விடுங்க சாமீ..!

நீலகிரி மாவட்டத்தில் 75 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, கடைகளில் விற்கப்படும் மது வகைகளில் கூடுதலாக 10 ரூபாய் பெறப்பட்டு வருகிறது. மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை திரும்ப டாஸ்மாக் கடையில் கொடுத்தால், 10 ரூபாய் திரும்ப பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
மாவட்டத்தில், நாள்தோறும் 2 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகிறது. இதன் மூலம், குறைந்த பட்சம் 86 ஆயிரம் காலி பாட்டில்கள் சேகரமாகிறது.
இந்த பாட்டில்களை தனியாருக்கு டெண்டர் விடும் பணியில் ஏற்பட்ட இழுபறியால், அந்தந்த கடைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் மதுவகைகள், சேகரமாகும் காலி மதுபாட்டில்களை வைக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கடந்த 15 நாட்களில் மட்டும் 13 லட்சம் காலி மதுபாட்டில்களை மூட்டைகளாக கட்டி கடைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாத நிலையால், இதனை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் கூறுகையில், “'நீலகிரியில் மது பாட்டில்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டுவதற்கு பதிலாக, உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் 'நீலகிரி மட்டும்' என்று அச்சிடப்பட்டு அனுப்ப வேண்டும்.
திரும்பப் பெறும் காலி பாட்டில்களை கையாள ஊழியர்களுக்கு பாட்டிலுக்கு 2 ரூபாய் தர வேண்டும். 13 லட்சம் காலி பாட்டில்களை விரைவில் டெண்டர் விட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

