புதிதாக 13 மாவட்டங்கள் உதயம்.. ஒப்புதல் அளித்தார் முதல்வர்..!
புதிதாக 13 மாவட்டங்கள் உதயம்.. ஒப்புதல் அளித்தார் முதல்வர்..!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் புதிய மாவட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமராவதியில் நடந்தது. இதில் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது விவாதம் நடைபெற்றது.
மொத்தம் 16,600 மனுக்கள் வந்ததால், அவை குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. நிறை, குறைகளை அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முதல்வரிடம் விவரித்தனர். பெயர் மாற்றம், தொகுதி ரீதியான மாற்றங்கள் போன்றவை குறித்து விவாதித்தனர்.
வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி தற்போதுள்ள 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாக அதிகாரப்பூர்வமாக பிரிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 9.05 முதல் 9.45 வரை புதிய மாவட்டங்கள் குறித்த இறுதி அறிக்கை வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக மாவட்டங்கள் உதயமாக உள்ளது.
ஏப்ரல் 6-ம் தேதி முதல் வார்டு, கிராம தன்னார்வலர்களின் சேவை தொடங்கப்படுகிறது. பின்னர் 8-ம் தேதி ‘வசதி தீவனா’ எனும் புதிய திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், “பொருளாதார ரீதியாக ஒவ்வொரு மாவட்டமும் முன்னேறும் வகையில் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசு கட்டடங்களுக்கு இடம் தேர்வு விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அனைத்து அரசு அலுவலக கட்டடங்களும் அமைக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

