தமிழகத்தில் 144 தடை உத்தரவு.. தேர்தல் கமிஷன் ஆலோசனை..!
தமிழகத்தில் 144 தடை உத்தரவு.. தேர்தல் கமிஷன் ஆலோசனை..!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.
இந்தத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தும், அதிமுகவுடன் சிறிய கட்சிகள் இணைந்தும் போட்டியிடுகிறது.
பாஜக - பாமக - தேமுதிக - மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது. அத்துடன், உள்ளூர் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவதற்கு, சுயேட்சைகளும் அதிக அளவில் களம் இறங்கி உள்ளனர். தேர்தல் பிரச்சாரம் ஒரு வாரத்திற்கு மேலாக களைகட்டி வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் ‘வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வழக்கம் போல ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடியவுள்ளது. எனவே, இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இதற்கிடையே, பிரச்சாரம் ஓய்ந்ததும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் நடக்க வாய்ப்புள்ளது. இப்போதே சில இடங்களில் பரிசுப் பொருட்கள் விநியோகம் துவங்கியுள்ளது.
அதை தடுக்கும் வகையில், பிரச்சாரம் ஓய்ந்ததும் 144 தடை உத்தரவை பிறப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

