போலீஸ் உடை அணிந்து பணப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது!!
போலீஸ் உடை அணிந்து பணப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் காக்கி உடை அணிந்து போலீஸ் எனக் கூறி வடமாநில இளைஞர்களிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
வைப்பூர் ஊராட்சியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பணி செய்து வருகின்றனர். அவர்களை குறிவைத்து சிலர் கஞ்சா போதையில் பணம், செல்போன், செயின் பறிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்த லுட்பூர் ரகுமான் என்பவர் வைப்பூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புல்லட்டில் வந்த இருவர் ரகுமானை மடக்கி சோதனையிட்டுள்ளனர்.

சோதனையில் ஏதும் இல்லாத நிலையில், பணம் கேட்டு அவரை மிரட்டி தாக்கியுள்ளனர். இதில் பயந்துபோன லுட்பூர் ரகுமான் தன் வங்கிக் கணக்கில் வைத்திருந்த 5 ஆயிரத்தை கூகுள் பே மூலம் போலீஸ் எனக் கூறி வந்த நபரின் எண்ணுக்கு அனுப்பி உள்ளார்.
இதையடுத்து தனக்கு நடந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடம் தெரிவிக்க கூகுள் பே மூலம் அனுப்பிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அந்த மர்ம ஆசாமிகள் இருவரையும் இளைஞர்கள் வரவழைத்தனர்.
அங்கு வந்த இருவர் மீதும் சந்தேகம் ஏற்படவே ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் போலி போலீஸ் என தெரியவந்தது. இதனையடுத்து வழிப்பறியில் ஈடுபட்டு சதீஷ்குமார் (34), சரவணன் (45). ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் போலீஸ் எனக் கூறி பல இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. வழிப்பறி சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.
newstm.in

