இந்த மாவட்டங்களில் 2 நாள் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
இந்த மாவட்டங்களில் 2 நாள் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (9-ம் தேதி) வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இலங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (10-ம் தேதி) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

