மியான்மரில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை.. தீவிர விசாரணையில் அதிகாரிகள்..!
மியான்மரில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை.. தீவிர விசாரணையில் அதிகாரிகள்..!

மியான்மரில் வசித்து வந்த இரண்டு தமிழர்களை பயங்கரவாத கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - மியான்மர் எல்லையான மணிப்பூர் மாவட்டம் மோரே பகுதியில் பி.மோகன்(28), எம்.அய்யனார்(35) என்ற தமிழர்கள் வசித்து வந்தனர். இதில், மோகன் ஆட்டோ ஓட்டுநராகவும், அய்யனார் சிறிய கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை 8:30 மணி அளவில் ஆட்டோ ஓட்டுநர் மோகன் மற்றும் வணிகர் அய்யனார் ஆகிய இரண்டு தமிழர்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மியான்மர் எல்லையான டாமு என்ற பகுதியில் இவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரில் ஆட்டோ ஓட்டுநர் மோகனுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வசித்துவந்த பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் அப்பாவிகள் என்றும், நண்பர்களை காண தமு பகுதிக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மோரே செக்டரிலுள்ள இந்தியா - மியான்மர் எல்லை வாசலிலிருந்து 4 கி.மீ தொலைவிலுள்ள டாமு என்ற இடத்தில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் மியான்மர் ஆட்சிக் குழுவால் அமைக்கப்பட்ட பியூ ஷா ஹ்டீ என்ற ராணுவ அமைப்பினராக இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில், அது தொடர்பாக விசாரிப்பதாகவும், விசாரணை முடிவில்தான் முழுமையான தகவல்களும் வெளியாகும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

