மாதம் 20 வாகனங்கள்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் கொடுத்த அசைன்மென்ட்..!
மாதம் 20 வாகனங்கள்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் கொடுத்த அசைன்மென்ட்..!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (25-ம் தேதி) சுரங்கத்துறை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “சுரங்கத்துறையை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். பறக்கும் படை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக, பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் அப்பகுதிகளை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதி வாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனடியாக பொது ஏலத்திற்கு கொண்டு வரவேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் தகுதி வாய்ந்த கல்குவாரிகளை உரிய ஏலத்திற்கு கொண்டு வந்து கனிம வருவாயை ஈட்டவும், பொது மக்களுக்கு கட்டுமான பொருட்களை நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மாவட்ட அலுவலர்களும் குறைந்த பட்சம் மாதத்திற்கு 20 வாகனங்களையாவது கைப்பற்ற வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு மணல் எடுத்துச் செல்லும் வாகனங்களை முற்றிலும் தடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

