பிரசவத்துக்குப் பிறகு 22 % பெண்களுக்கு மன அழுத்தப் பாதிப்பு: தீர்வுகாண அரசு நடவடிக்கை !!
பிரசவத்துக்குப் பிறகு 22 % பெண்களுக்கு மன அழுத்தப் பாதிப்பு: தீர்வுகாண அரசு நடவடிக்கை !!

பிரசவத்துக்குப் பிறகு 22 சதவீத பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முதியோர் மற்றும் மனநலம் குன்றியோர், பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்த சிகிச்சை பிரிவுகள் உள்பட 5 பிரிவுகளை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு ஆகியோர் தொடக்கி வைத்தனா். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசினார்.
அப்போது, ஒமந்தூரார் மருத்துவமனையில் புதிய முயற்சியாக மனநலம் குன்றி ஆதரவற்ற நோயாளிகளுக்கான சேவை மையம் தொடங்கப்பட்டது. இதேபோன்று, 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு மருத்துவமனைகள்தோறும் தலா 10 படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை மற்றும், உணவு, உடை இலவசமாக வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள சுகாதாரத் தரவுகளின்படி, பிரசவத்துக்குப் பிறகு 22 சதவீத பெண்களுக்கு உளவியல் மாற்றம் ஏற்பட்டு மனஅழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனா். இவா்களுக்கு தாழ்வு மனப்பான்மை, உடல் பலவீனம், பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அத்தகைய பாதிப்புக்குள்ளானோருக்கும் அரசு மருத்துவமனைகளில் உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர இணையதளத்துக்கு அடிமையாகி பல்வேறு பாதிப்புகளில் சிக்கியுள்ளவா்களை மீட்க, இணைய அடிமை நோய் தடுப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கு செவித்திறன் மற்றும் பேச்சு பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஆயிரத்தில் ஒரு குழந்தை செவித்திறன் பிரச்னையுடன் பிறக்கிறது. இந்த சிகிச்சை பிரிவு வாயிலாக, முன்கூட்டியே பச்சிள குழந்தைகளுக்கான பிரச்னைகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். இதுபோன்ற பிரிவுகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, புதிதாக தொடங்கப்பட உள்ள, 11 மருத்துவக் கல்லூரிகளிலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்
newstm.in

