மதுகுடித்த 22 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. 28 பேர் கவலைக்கிடம்.. உ.பி., அதிர்ச்சி !!
மதுகுடித்த 22 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. 28 பேர் கவலைக்கிடம்.. உ.பி., அதிர்ச்சி !!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் சுமார் 5 கிராமங்களில் மதுபானம் அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தும், வாந்தி எடுத்தும் காணப்பட்டடதால் அப்பகுதி மக்கள் அதிச்சி அடைந்தனர். பின்னர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பலரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த வகையில் தற்போது 22 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 28 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து பாதிக்கப்படுவோர் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளன. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே மது குடித்ததால் அவர்கள் இறந்ததாக கூறப்படும் நிலையில் அது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராய தொழில் நடத்தி வரும் அனில் சவுத்ரி உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 2 முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட போலீஸ் அறிவித்துள்ளது. இதுதவிர துறைரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட கிராமங்களின் அருகில் உள்ள லைசென்ஸ் பெற்ற மதுக்கடைகளும் சீல் வைக்கப்பட்டன. அந்த கடைகளில் உள்ள மதுபானங்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.‘ அலிகார் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் செயல்படும் சுமார் 500 மதுபானக்கடைகளும் மூடப்பட்டன. போலி மதுபானம் தொடர்பான விசாரணை முடியும் வரை அந்த கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் அடுத்தடுத்து 22 பேர் உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டுள்ளது.
newstm.in

