தமிழகத்தில் ஒரேநாளில் 2,34,175 பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி.. சாதித்த திருவண்ணாமலை.. பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டம் !
தமிழகத்தில் ஒரேநாளில் 2,34,175 பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி.. சாதித்த திருவண்ணாமலை.. பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டம் !

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 2,34,175 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு திங்கள்கிழமை (ஜன. 3) முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை இந்த திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
நாட்டில் 18 வயதைக் கடந்தவா்களுக்கு கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (திங்கள்கிழமை) தொடங்கின. அவா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டது.

ஜனவரி 20ஆம் தேதிக்குள், 33.46 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்நாளான இன்று தமிழகத்தில் ஒரேநாளில் 2,34,175 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,310 பேருக்கும், விழுப்புரத்தில் 15,266 சிறார்களுக்கும், சேலத்தில் 12,970 சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடலூர் - 12,482 சிறார்கள், கன்னியாகுமரி - 11,579 சிறார்கள், கள்ளக்குறிச்சி - 10,766 சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
சென்னையில் 4,601 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 407 சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
newstm.in

