வணிக வளாக தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழப்பு... பிரதமர் இரங்கல்
வணிக வளாக தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழப்பு... பிரதமர் இரங்கல்

மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே பல வணிக நிறுவனங்களுடன் நான்கு மாடி கட்டட வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தின் மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவியது. இதனால் வணிக வளாகத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும் கடுமையாக தீ பரவியதால் அப்பகுதியில் தீப்பிழம்பும், கரும்புகையும் விண்ணை முட்டும் அளவுக்கு எழும்பியது. உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்தில் உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத்துறை துணை தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி தெரிவித்தார்.
40க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

வணிக வளாகத்தில் தீ பிடித்த நிலையில் தப்பிக்க நினைத்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. நீண்ட போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், மீட்பு பணிகளில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது மிகவும் துயரமான சம்பவம் என்றும் அவர் கூறியுள்ளார்
newstm.in

