ரூ.10 கோடி மதிப்புள்ள கடல் தங்கம் வைத்திருந்த 3 பேர் கைது..!!
ரூ.10 கோடி மதிப்புள்ள கடல் தங்கம் வைத்திருந்த 3 பேர் கைது..!!

திமிங்கலத்தின் எச்சத்திற்கு அம்பர்கிரிஸ் என பெயர். கடலில் உள்ள பீலிக் கணவாய் போன்ற கடினமான ஓடுகளை கொண்ட மீன்களை திமிங்கலங்கள் வேட்டையாடி உண்ணும். அப்போது இந்த ஓடுகள் திமிங்கலங்களுக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் திமிங்கலத்தின் வயிற்றில் இந்த ஓட்டை சுற்றி ஒருவிதமான திரவம் உற்பத்தி ஆகிறது. இதனையே அம்பர்கிரிஸ் என்கிறார்கள்.
இந்த அம்பர்கிரிஸ் வாசனை திரவியங்கள் தயாரிக்கவும், பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கடலின் மேற்பரப்பில் மிதந்து வரும் அம்பர்கிரிஸ் மீது சூரிய ஒளி பட்டு இதனை கடினமான பொருளாக மாற்றுகிறது.

மேலும் இவை கிடைப்பது மிகவும் அரிது. இதனால் இதன் விலை பல கோடி ரூபாய் வரை செல்கிறது. அதுமட்டுமல்லாது இதனைக் கடல் தங்கம் என்றும் மிதக்கும் தங்கம் என்றும் அழைக்கின்றனர்.
இந்த நிலையில், மதுரை தெற்குவாசல் அருகே மறவர்சாவடி பகுதியில் உள்ள கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கல எச்சங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வன உயிர் பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடையில் சோதனை செய்த போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோவிற்கும் அதிகமான திமிங்கல எச்சத்தினை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, இவற்றை பதுக்கிவைத்திருந்த மதுரை மஞ்சணக்கார தெருவைச் சேர்ந்த ராஜாராம் (36), வில்லாபுரம் ஹவுசிங்போர்டைச் சேர்ந்த சுந்தரபாண்டி (36), சிவகங்கை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த கவி (48) ஆகிய மூவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், பதுக்கிவைத்திருந்த அம்பர்கிரிஸின் மதிப்பு சுமார் ரூ. 10 கோடி இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

