ஆண் குழந்தையை பெற்றோரிடம் ரூ.80,000-க்கு வாங்கி ரூ.3 லட்சத்திற்கு விற்பனை.. 3 பெண்கள் கைது !!
ஆண் குழந்தையை பெற்றோரிடம் ரூ.80,000-க்கு வாங்கி ரூ.3 லட்சத்திற்கு விற்பனை.. 3 பெண்கள் கைது !!

ஆண் குழந்தையை பெற்றோரிடம் இருந்து ரூ.80,000-க்கு வாங்கி ரூ.3 லட்சத்திற்கு விற்பனை தரகர் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வேளச்சேரி கண்ணகி நகரில் சின்னத்துரை - விஜயலட்சுமி (வயது 30) தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 10 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே வறுமையில் தவித்துவந்த இந்த தம்பதி, குழந்தையை விற்க முடிவு செய்தனர். அதன்படி, 10 மாத ஆண் குழந்தையை ரூ.80 ஆயிரத்துக்கு செங்குன்றத்தை சேர்ந்த தரகர் தங்கம் என்பவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, குழந்தையை வாங்கிய தங்கம் செங்குன்றத்தை சேர்ந்த நவநீதம் என்பவருக்கு ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில், குழந்தையை வாங்கிய நவநீதம் அந்த குழந்தையை ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள உறவினரிடம் கொடுத்து வளர்க்க சொல்லியுள்ளார்.
இந்த தகவல் அரசு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து, சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நல குழுமத்தின் உறுப்பினர் லலிதா, செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் தரகரை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், ஆந்திராவில் இருந்து குழந்தையை மீட்டு சென்னை அண்ணாநகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து குழந்தையை விற்பனை செய்த தாய் விஜயலட்சுமி, தரகர் தங்கம் குழந்தையை வாங்கிய நவநீதம் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in

