3 பேர் துன்புறுத்துகின்றனர்.. கலெக்டர் அலுவலகத்தில் தாய் - மகள் தர்ணா..!
3 பேர் துன்புறுத்துகின்றனர்.. கலெக்டர் அலுவலகத்தில் தாய் - மகள் தர்ணா..!

கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு தலப்பள்ளிவிளையை சேர்ந்தவர் நிர்மலா (41). இவர் நேற்று தன் மகளுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன் தாயும், மகளும் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது நிர்மலா ஒரு மனுவை கொடுத்தார். அதில், “எங்களது சொத்து சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. ஆனால் இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி, வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் என்னை துன்புறுத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் இனி அவர்கள் என்னை தொந்தரவு செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட நபர்கள் என்னை தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்தார்கள். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, தாயும் மகளும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

