தென்மாவட்டத்தில் பரபரப்பு.. பெண் உட்பட 3 பேர் சரமாரியாக வெட்டிக்கொலை..!
தென்மாவட்டத்தில் பரபரப்பு.. பெண் உட்பட 3 பேர் சரமாரியாக வெட்டிக்கொலை..!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ஜேசுராஜ் (73). கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார்.
இவருடைய தம்பி மரியராஜ் (56). அவர்களுடைய சகோதரி வசந்தா (40). இவர், பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக பணியாற்றி வந்தார்.
அவர்களுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவர்களுடைய சித்தப்பா மகன் அழகர்சாமி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்த நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு போலீசார் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜேசுராஜ், ஒரு நிலத்தில் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்க போர் போட்டு இருந்தார். அப்போது ஜேசுராஜ் உடன் அவரது தம்பி மரியராஜ், சகோதரி வசந்தா, வசந்தாவின் கணவர் மற்றொரு ஜேசுராஜ் (43), மரியராஜன் மகன் அமோஸ் (23) உள்ளிட்டோர் அந்த இடத்தில் இருந்துள்ளனர்.
அப்போது அழகர்சாமி, அவரது மனைவி பேச்சியம்மாள், மருமகன் செந்தூர்குமார் (25), மகன்கள் ராஜ மணிகண்டன், சுந்தரபாண்டி மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்து, அவர்களிடம் தகராறு செய்தனர்.
தகராறு முற்றவே அவர்கள் ஜேசுராஜ், மரியராஜ் உள்ளிட்டோரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், வசந்தா மற்றும் அவரின் உறவினர்கள் ஜேசுராஜ், மரியராஜ் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலத்தகராறில் பெண் உட்பட 3 பேர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தென் மாவட்டத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

