வரும் ஜூலை மாதம் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி..!!
வரும் ஜூலை மாதம் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி..!!

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. உலகளவில் செஸ் போட்டியில் சிறந்து விளங்கக்கூடிய முன்னணி வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா்.

இந்த போட்டியை மிக பிரமாண்டமான முறையில் நடத்திட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஒலிம்பியாட் போட்டிகளுக்கான விழாக்கள், வரவேற்பு, பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து முதல்வர் அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 28 முதல் ஆகஸ்ட்10-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜூலை 28-ம் தேதி நேரு உள் அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டுத்துறை செயலாளர் அபூர்வா, செஸ் ஒலிம்பியாட் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர்.
மேலும், ரிப்பன் மாளிகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் இலச்சினை மற்றும் சின்னத்தை ஒளிப்பட காட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான கவுண்ட்டவுனையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

