கொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்.. பிரதமருக்கு மன்மோகன் சிங் கடிதம் !!
கொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்.. பிரதமருக்கு மன்மோகன் சிங் கடிதம் !!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தடுப்பு மருந்து உற்பத்திக்காக அனுமதி தரப்பட்டு உள்ள நிறுவனங்கள், விநியோகிக்க உரிமம் பெற்ற நிறுவனங்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தடுப்பு மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவசர காலத்தில் விநியோகம் செய்வதற்கு 10 சதவீத மருந்துகளை மத்திய அரசு தன் வசம் வைத்திருக்க வேண்டும். மற்றவற்றை, மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்ள தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும்
முன்களப் பணியாளர்கள் யார் என்பதை வரையறுக்கவும். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந்தாலும் தடுப்பூசி போடுவதற்கும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

உதாரணமாக பள்ளி ஆசிரியர்கள், பேருந்து மற்றும் மூன்று சக்கர மற்றும் டாக்சி டிரைவர்கள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களை மாநில அரசுகள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அனுமதி வழங்கலாம். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந்தாலும் தடுப்பூசி போட அனுமதி வழங்கலாம். தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் அதிகம். சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை விரைவாக அதிகரிக்க தேவையான நிதி மற்றும் சலுகைகளை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.

மேலும், சட்டத்தில் உள்ள கட்டாய உரிமம் முறையை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம், ஒரு உரிமத்தின் மூலமாக, தடுப்பு மருந்தை ஏராளமான நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியும். இது போன்ற முறை எய்ட்ஸ் நோய் பரவிய நேரத்தில் கடைபிடிக்கப்பட்டது. கொரோனா கவலைக்கு உரியதாக உள்ள நிலையில், கட்டாய லைசென்ஸ் முறையை இஸ்ரேல் அமல்படுத்தி உள்ளது. இந்தியாவில், அதிகம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை இந்தியா விரைவாக கடைபிடிக்க வேண்டும்.
சரியாக எத்தனை தடுப்பூசிகள் போட்டுள்ளோம் என கணக்கு பண்ணுவதில் ஆர்வம் செலுத்துவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதிலாக, மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்தியாவில் இதுவரை குறைந்த அளவிலான மக்கள் தொகையினருக்கே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. சரியான கொள்கை வடிவம் இருப்பின் இன்னும் சிறப்புடனும், விரைவாகவும் செயல்பட முடியும் என்பது நிச்சயம் .

உள்நாட்டு மருந்து குறைவாக உள்ளதால், ஐரோப்பிய மருத்துவ நிறுவனம் அல்லது அமெரிக்க மருத்துவ நிறுவனம் ஒப்புதல் வழங்கிய மருந்துகளை, நமது நாட்டில் எந்த தடையும் இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். நாம், கணிக்க முடியாத அவசர நிலையை எதிர்கொண்டு வருகிறோம். அவசர காலத்தில் இவ்வாறு செய்வதை நிபுணர்கள் ஏற்று கொள்வார்கள். இந்த தளர்வை குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கலாம். இந்த தடுப்பூசிகளை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்தலாம், மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
newstm.in

