பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி உள்பட 5 பேர் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படை அதிரடி !!
பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி உள்பட 5 பேர் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படை அதிரடி !!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுன்டரில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பட்காம் மற்றும் புல்வமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உள்ளூர் காவல்துறையினருடன் பாதுகாப்பு படையினர் இணைந்து இரு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நெருங்கி வருவதை அறிந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் தப்பித்த பாதுகாப்பு படையினர் மறைந்துகொண்டு பதில் தாக்குதல் நடத்தினர்.

அதன்படி, இரு இடங்களிலும் நடைபெற்ற என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ஷகித் வானி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 4 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
மேலும் ஏகே 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த மாதத்தில் மட்டும் இதுவரை நடைபெற்ற 11 என்கவுன்டர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 8 பேர் உட்பட மொத்தம் 21 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
newstm.in

