5 ஆண்டுகளாக சம்பள பாக்கி.. பிரபல செய்தி நிறுவன போட்டோகிராபர் தூக்கு மாட்டி தற்கொலை..!
5 ஆண்டுகளாக சம்பள பாக்கி.. பிரபல செய்தி நிறுவன போட்டோகிராபர் தூக்கு மாட்டி தற்கொலை..!

சென்னை திருவல்லிக்கேணி நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (56). இவர், பிரபல நியூஸ் ஏஜென்சி நிறுவனமான யு.என்.ஐ (UNI) செய்தி நிறுவனத்தின் சென்னை பிரிவு தலைமை நிர்வாகியாகவும், போட்டோகிராபராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், குமார் வேலை பார்த்து வந்த நியூஸ் ஏஜென்சி நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சம்பளம் தராமல் அலைக்கழித்து வந்ததாகவும், இதனால் குமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மகளின் திருமணத்திற்கு பலரிடம் பணம் கேட்டும் கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்த குமார், நேற்று இரவு நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் உள்ள யுஎன்ஐ அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நள்ளிரவு அலுவலகத்திற்குச் சென்ற சக ஊழியர் வனமாலை என்பவர் கதவை திறந்து பார்த்தபோது, குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் போலீசார், குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம், செய்தித் துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

