5 ஆண்டுகள் நிறைவு: டிவிட்டரில் ட்ரெண்டான Black Day Indian Economy ஹேஷ்டேக் !
5 ஆண்டுகள் நிறைவு: டிவிட்டரில் ட்ரெண்டான Black Day Indian Economy ஹேஷ்டேக் !

நாட்டையே உலுக்கி எடுத்த பணமதிப்பிழைப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ஒட்டி Black Day Indian Economy என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகியது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபிறகு கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். தொடக்கத்தில் வழக்கம்போல் பேசிய பிரதமர் மோடி, திடீரென புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இத்திட்டத்தால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர். இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளிலும், ஏ.டி.எம். வாசல்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பயங்கரவாதிகளுக்கு பணம் செல்லுவது தடுக்கப்படுவதோடு இந்திய பொருளாதாரமும் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு கூறினாலும் இந்த நடவடிக்கையால் மீட்கப்பட்ட கருப்பு பணம் குறித்து எந்தவித தரவும் வெளியாகவில்லை. மேலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கட்டுமானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடும் பின்னடைவை சந்தித்தன.

இதனால் பணமதிப்பிழைப்பு அறிவிக்கப்பட்ட நம்பவம் 8ஆம் தேதியான இந்த தினம் இந்திய பொருளாதாரத்தின் கருப்பு தினம் என Black Day Indian Economy என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டானது. அதேபோல் பல்வேறு எதிர்கட்சி தலைவர்களும் இந்த நடவடிக்கை தொடர்பாக தற்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

