தமிழகத்தில் 5,000 மையங்கள்! ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி!
தமிழகத்தில் 5,000 மையங்கள்! ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பொது மக்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், மார்க்கெட்டுகளில் பணிபுரிபவர்கள், பஸ், ரயில் நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது அசுர வேகம் எடுத்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் தேவை எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா ,கர்நாடகா, டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பொதுமக்கள் இந்த காலகட்டத்தில்தான் மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.முகக்கவசம் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொண்டதாலேயே பலருக்கு பரவி வருகிறது. மேலும் பரவாமல் தடுக்க தடுப்பூசி போடுவதும், தடுப்பூசி போட்டவர்களும், தொடர்ந்து முகக்கவசம் அணிவதும் அவசியம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். நாம் அணிவதுடன் சுற்றியுள்ளவர்களையும் அணிய அறிவுறுத்த வேண்டியதும் அவசியமே என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தவிர ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு எந்த நோயும் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இதற்கு முன்பதிவு செய்ய அவசியம் இல்லை. ஆதார் கார்டு, பான்கார்டு ,ரேஷன் கார்டு என ஏதாவது அடையாள அட்டை வைத்திருந்தாலே போட்டுக் கொள்ளலாம். ஏற்கனவே தமிழ்நாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் தடுப்பூசி போடுவதற்காக திறக்கப்பட்டிருந்தாலும் இதையும் ,மேலும் அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

