உக்ரைனில் 210 குழந்தைகள் உள்பட 5,000 பேர் பலி.. உடல்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரம் !!
உக்ரைனில் 210 குழந்தைகள் உள்பட 5,000 பேர் பலி.. உடல்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரம் !!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, குண்டுகள், ஏவுகணைகளை மழை போல் பொழிந்து வருகிறது. இதனால் கீவ், கார்கிவ், இர்பின் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கார்க்கிவ் நகரில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யாவால் அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகின. ஏராளமான வணிக வளாகங்கள் எரிந்து நாசமாகின. பல்வேறு நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளதால், அங்கிருந்து மக்கள் செஞ்சிலுவை சங்கத்தினரின் உதவியுடன் 45 பேருந்துகளில் வெளியேற்றப்பட்டனர். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இர்பின் நகரில் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை உக்ரைன் பேரிடர் மீட்புக் குழுவினர் பிளாஸ்டிக் பைகள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கார்க்கிவ் புறநகர் பகுதி கிராமம் ஒன்றை உக்ரைன் படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர். தொடர் தாக்குதலில் கிவ் நகரம் முழுவதும் ஏராளமான வாகனங்கள் சிதறி கிடைக்கும் நிலை காணப்படுகிறது. போரில் ரஷ்ய படைகள் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதால் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
newstm.in

