இலங்கையில் 58 கைதிகள் தப்பி ஓட்டம்.. தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு..!
இலங்கையில் 58 கைதிகள் தப்பி ஓட்டம்.. தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு..!

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்த்து பொதுமக்கள் நடத்தி வந்த போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளதால், நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, இலங்கை ஹம்பந்தோட்டா சிறைச்சாலையிலிருந்து கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில், பேருந்தில் இருந்த 58 கைதிகள் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், தப்பிச்சென்ற கைதிகள் மற்றும் தேச விரோதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரை மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட கடற்பகுதிகளில் இந்திய கடலோரக் காவல் படையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், சந்தேகப்படும்படியான படகுகள் ஏதாவது தமிழக கடல் பகுதிக்குள் காணப்பட்டால் அது குறித்து தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

