இலங்கை பொறியாளரை உயிருடன் எரித்து கொன்ற 6 பேருக்கு தூக்கு.. பாக். நீதிமன்றம் தீர்ப்பு !!
இலங்கை பொறியாளரை உயிருடன் எரித்து கொன்ற 6 பேருக்கு தூக்கு.. பாக். நீதிமன்றம் தீர்ப்பு !!

இலங்கையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரியந்த குமார தியவதன (49) என்பவர் 11 ஆண்டுக்கு முன் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார். அவர், பாகிஸ்தானின் சியால்கோட் நகரிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் குறிப்பிட்ட மதத்தை அவமதித்தாக கூறி தொழிற்சாலை ஊழியர்கள் அவருக்கு எதிராக அவதூறு பரப்பினர்.

மதத்தை அவமதித்ததாக தகவல் பரவியதால் அதே பகுதியைச் சேர்ந்த மக்கள், ஆலை பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து அவரை தாக்கினர். அதாவது, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மத அடிப்படைவாத கும்பல் ஒன்று அவரை கொடூரமாக தாக்கியது. தொழிற்சாலை கட்டிடத்தின் மாடியில் இருந்து தூக்கி வீசி எறிந்து, வீதியில் எரித்து கொடூரமாக கொலை செய்தது.

இந்த கொடூர சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலை ஊழியர்கள் உட்பட 900 பேருக்கு எதிராக போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 9 சிறுவர்கள் உட்பட 88 பேருக்கு எதிராக கடந்த மார்ச் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட 88 பேரில் முக்கிய குற்றவாளிகளான 6 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி நடஷா நஸீம் தீர்ப்பளித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேருக்கும் தலா 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஒருவருக்கு 5 வருட சிறைத் தண்டனையும், 72 பேருக்கு தலா இரண்டு வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
newstm.in

