ஒரே அரசுப் பள்ளியிலிருந்து மருத்துவப் படிப்பிற்கு தேர்வான 7 மாணவிகள்.. சாதித்த நெல்லை மாணவிகள் !!
ஒரே அரசுப் பள்ளியிலிருந்து மருத்துவப் படிப்பிற்கு தேர்வான 7 மாணவிகள்.. சாதித்த நெல்லை மாணவிகள் !!

மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் நெல்லையில் உள்ள ஒரே அரசு பள்ளி மாணவிகள் 7 பேருக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது, பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மருத்துவ படிப்புகளில் சேர கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4 ஆயிரத்து 349 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 650 இடங்கள் என, இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்) மொத்தம் 6 ஆயிரத்து 999 இடங்கள் உள்ளன. இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பிற்கு கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
இதில், நெல்லையில் ஒரே பள்ளியில் படித்த 7 மாணவிகளுக்கு 7.5 சதவீத மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ இடம் கிடைத்தது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரே பள்ளியின் பயின்று மருத்துவப் படிப்புக்கு வெற்றிபெற்ற மாணவிகளின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஞானலசி, இசக்கியம்மாள், நட்சத்திரபிரியா ஆகியோருக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், காயத்ரி என்ற மாணவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. அதேபோல சவுந்தர்யா என்ற மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியிலும், கிருத்திகா என்ற மாணவிக்கு கோவை தனியார் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இடம் முதல்கட்ட கலந்தாய்வில் கிடைத்துள்ளது.
அதே பள்ளியில் படித்த மற்றொரு மாணவி அப்ரீன் பாத்திமாவுக்கு பல் மருத்துவம் படிப்பதற்கு, கோவையில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

மாநகராட்சி பள்ளியில் படித்த 7 மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது, நெல்லை மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வின் முதல் நாளிலேயே ஒரே அரசு பள்ளியை சேர்ந்த 7 மாணவிகளுக்கு மருத்துவக்கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்த வாய்ப்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பள்ளி நிர்வாகத்துக்கும், மாணவிகளுக்கும் மக்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

