Theme Check

84 ஆண்டுகளுக்கு பின்.. 6ம் தேதி வரை கன மழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

84 ஆண்டுகளுக்கு பின்.. 6ம் தேதி வரை கன மழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

84 ஆண்டுகளுக்கு பின்.. 6ம் தேதி வரை கன மழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!
X

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் வரும் 6ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: “தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.

இது மேலும் வலுப்பெற்று, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழக கடற்கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கன மழையும், நாளை மிக கன மழையும் பெய்யும். சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும்.

வரும் 6-ம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக கன மழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு குறைவு. ஆழ்ந்த மண்டலமாக மாறி வலுவிழக்கும். தமிழக பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் நாடு முழுவதும் கோடை காலம். இந்த கால கட்டத்தில் புயல் சின்னங்கள், காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மிக அரிதாகவே ஏற்படும்.

கடந்த 1938ம் ஆண்டில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. தற்போது 84 ஆண்டுகளுக்கு பின் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

அதேபோல, 1994 மார்ச்சில் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, தாழ்வு மண்டலமாக வலுப்பெறவில்லை.

இந்த ஆண்டு கோடை காலத்தை பொறுத்தவரை, முந்தைய ஆண்டுகளை விட வெப்பம் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

அதேபோல, தென் மாநிலங்களிலும் இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட குறைய வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.

Next Story
Share it