Theme Check

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்.. தனி நீதிபதியின் கருத்து நீக்கம்..!

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்.. தனி நீதிபதியின் கருத்து நீக்கம்..!

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்.. தனி நீதிபதியின் கருத்து நீக்கம்..!
X

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை கடந்த ஜனவரியில் விசாரித்த தனி நீதிபதி, ‘‘கொரோனா கால கட்டம் என்பதால் தாமதமாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நேரிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீசார் நிறைவேற்றியிருந்தாலும், தற்போது தமிழக காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.

எஞ்சிய 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமைசாலிகளாகவும் உள்ளனர். எனவே காவல்துறையில் உள்ள ஊழல்வாதிகளைக் களைந்து திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது’’ என தனது உத்தரவில் குறிப்பிட்டு அந்த வழக்கை முடித்து வைத்திருந்தார்.

தனி நீதிபதியின் இந்த கருத்து, ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள இந்த பகுதியை மட்டும் நீக்க வேண்டும் எனக் கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. தமிழக டிஜிபி தரப்பி்ல் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ‘‘தனி நீதிபதி தனது உத்தரவில் 90 சதவீத காவல்துறை அதிகாரிகள் ஊழல்வாதிகள், திறமையற்றவர்கள் என வழக்குக்கு சம்பந்தமில்லாத கருத்துகளை வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு தெரிவித்துள்ளார்.

உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்து வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு இதுபோன்ற உத்தரவு மிகுந்த வருத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுபோல வழக்குக்கு சம்பந்தமில்லாத கருத்துகளை நீதிபதிகள் தெரிவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள அந்த கருத்துக்களை நீக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள காவல்துறை அதிகாரிகள் பற்றிய அந்தப் பகுதியை மட்டும் நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.

Next Story
Share it