குடிப்பதற்காக பைக்கை திருடி ரூ.1000க்கு விற்ற போதை நபர்!!
குடிப்பதற்காக பைக்கை திருடி ரூ.1000க்கு விற்ற போதை நபர்!!

மது குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டதால் இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல் நிலையத்தில் புகார்கள் வந்தபடி இருந்தன.
இது தொடர்பாக செங்குன்றம் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து பைக்கை திருடிய நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் போலீஸார் வாகன தணிக்கையின் போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த நபர் ஒருவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் பாடியநல்லூர் அண்ணாதெருவை சேர்ந்த உமாபதி (50) என்பதும், அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் வேலை செய்துவருகிறார் எனவும் தெரியவந்தது. உமாபதி கடந்த ஒரு ஆண்டு காலமாக வேலையின்றி சுற்றி திரிந்ததால் செலவுக்கும் குடிப்பதற்கும் பணம் தேவைப்பட்டது.
இதனால் மார்க்கெட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடி அதனை கிராமங்களுக்கு சென்று 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து அந்த பணத்தை குடிப்பதற்கு செலவு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இவரை கைது செய்து இவரிடமிருந்து 7 இருசக்கர வாகனத்தை மீட்ட செங்குன்றம் குற்றப்பிரிவு போலிஸார் இவர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in

