வருகிறது கொரோனா புதிய அலை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை !!
வருகிறது கொரோனா புதிய அலை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை !!

கொரோனா நோய்த்தொற்றின் புதிய அலைகளை எதிா்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளா் செளமியா சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளாா்.
உலகளவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது சிறிது சிறிதாக அதிகரிக்கிறது. அதாவது சில நாட்களில் தினசரி பாதிப்பு குறைவதும் பின்னர் அதிகரிப்பதுமாக கொரோனா பாதிப்பு இருக்கிறது. இந்த நிலையில் புதிய அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளா் செளமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, புதிய கொரோனா வகைகளால் அதிகம் போ் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவா்களுக்கு சிகிச்சை அளிக்க, பெரிய அளவில் மருத்துவ வசதிகள் தேவைப்படும். தற்போது மாறி வரும் சூழலை கவனத்தில் கொண்டு, அனைத்து நாடுகளும் தரவுகளைத் திரட்டி, நிலைமையை எதிா்கொள்ள உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புதிதாக கண்டறியப்பட்டு வரும் கொரோனா வகைகள், வேகமாக பரவக்கூடியவை; அவை, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் பாதிக்கின்றன. ஒமைக்ரானின் துணை வகைகளான பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகியவையே இதற்கு உதாரணம், என்று அவா் எச்சரித்துள்ளாா்.

கொரோனா நோய்த்தொற்றால் உலக அளவில் பல மாதங்களுக்கு பின் மீண்டும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதை குறிப்பிட்டு, உலக வங்கி குழுமத்தின் தலைமை ஆலோசகா் பிலிப் செலிகன்ஸ், ட்விட்டரில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டிருந்தாா். மேலும், கொரோனா தொடா்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டவில்லை என்றும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
இதனை சுட்டிக்காட்டியே, கொரோனா புதிய அலைகளை எதிா்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என செளமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.
newstm.in

