அதிகாலையில் வெடித்தது ஏசி.. அருகே படுத்திருந்த இளைஞர் ஐசியூவில் அனுமதி..!
அதிகாலையில் வெடித்தது ஏசி.. அருகே படுத்திருந்த இளைஞர் ஐசியூவில் அனுமதி..!

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் அடுத்த திருத்தேரி பகுதியில் உள்ள அன்பு மெஸ் எனும் உணவகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராம்குமார்(27) என்ற இளைஞர் வேலை கேட்டு வந்துள்ளார்.
கடையின் உரிமையாளர் தங்கமாரியப்பன் ராம்குமாரை வேலைக்கு சேர்த்துக் கொண்டுள்ளார். கடந்த பத்து நாட்களாக அங்கேயே வேலை செய்வதும், கடையின் மாடியில் படுத்துக் கொள்வதுமாக ராம்குமார் இருந்துள்ளார்.

வழக்கம் போல நேற்று இரவு ராம்குமார் கடையின் மொட்டை மாடியில் ஏ.சி.யின் அவுட்டோர் யூனிட் அருகே படுத்து உறங்கியுள்ளார்.
அவர் அருகே தங்கமாரியப்பனும் உறங்கியுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென ஏதோ ஒன்று வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
தங்கமாரியப்பன் எழுந்து பார்த்தபோது, ஏ.சி.யின் அவுட்டோர் யூனிட் வெடித்து கரும்புகை வெளியேறிக் கொண்டிருந்திருந்தது. ராம்குமார் மயங்கிய நிலையில் இந்துள்ளார்.

அருகே ராம்குமாரின் செல்போனும் தீப்பற்றிய நிலையில் இருந்திருக்கிறது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ராம்குமார் அனுமதிக்கப்பட்டார்.
ராம்குமாருக்கு நாற்பது சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருந்த காரணத்தினால் செங்கல்பட்டு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஏ.சி. பொருத்தப்பட்டிருந்த அறையிலும் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. ஏ.சி.யின் அவுட்டோர் யூனிட் வெடித்து செல்போன் தீ பிடித்ததா, அல்லது உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

