'வெட்டுவேன்' என வேட்பாளர்களை மிரட்டிய அதிமுக நிர்வாகி.. கைதுக்கு தயாராகும் போலீசார் !!
'வெட்டுவேன்' என வேட்பாளர்களை மிரட்டிய அதிமுக நிர்வாகி.. கைதுக்கு தயாராகும் போலீசார் !!

’தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி மாறினால் வீடு தேடி வந்து வெட்டுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய அதிமுக ஒன்றியச் செயலர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக கிழக்கு மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மேலும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய சாத்தூர் கிழக்கு ஒன்றியச்செயலர் சண்முகக்கனி, அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்துவிட்டு எந்தக் கவுன்சிலராவது கட்சி மாறினால் அவனை வீடு தேடி வந்து வெட்டுவேன். மாவட்டச் செயலரிடம் சொல்லிவிட்டும் வெட்டுவேன். இதோடு நிறுத்திவிடாமல், அப்படி வெட்டும்போது, என் வெட்டு முதல் வெட்டாக இருக்கும். கட்சியில் ஜெயித்துவிட்டு எவனாவது கட்சிமாறிப் போனால் உங்க போஸ்ட்மார்ட்டம் ஜி.ஹெச்-ல்தாண்டா, எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் கூட்டத்திற்கு வந்தவர்களே அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் இப்படி மிரட்டும் வகையில் பேசலாமா எனவும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில், அதிமுக ஒன்றிய செயலாளரின் மிரட்டும் வகையிலான பேச்சு குறித்து சார்பு ஆய்வாளர் பாண்டியனின் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அதிமுக சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலர் சண்முகக்கனி மீது சாத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அவர் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு அதிமுகவில் எழுந்துள்ளது.
newstm.in

