அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் நிறுவனத்தில் ரூ.30 கோடி மோசடி.. 3 பேர் கைது
அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் நிறுவனத்தில் ரூ.30 கோடி மோசடி.. 3 பேர் கைது

அதிமுக முன்னாள் வனத்துறை அமைச்சரின் மகனின் நிதி நிறுவனத்தில் ரூ.30 கோடி கையாடல் செய்த தம்பதி உள்பட 3 பேர் சிக்கினர்.
அதிமுக ஆட்சி காலத்தில் 1991- 96ஆம் ஆண்டுகளில் தமிழக வனத்துறை அமைச்சராக இருந்தவர் லாரன்ஸ். இவரது மகன் ஆண்டோ ஸ்டாலின் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார்.
ஆனால், இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததால் நிதி நிறுவனத்திற்கு இடைத்தரகராக பணியாற்றிய ரமேஷ் என்பவரை தனது நிதி நிறுவனத்திற்கு மேலாளராக பணி அமர்த்தினார் ஆண்டோ. ரமேஷ், தனது நண்பர் இலங்கை தமிழரான சுதாகர் மற்றும் அவரது மனைவி பிரேமசுதா ஆகியோருடன் இணைந்து 116 நிறுவனங்கள் இருப்பது போன்று போலி ஆவணங்களை தயாரித்து, ஆண்டோ ஸ்டாலின் நடத்தி வரும் நிதி நிறுவனம் மூலம் ரூ.30 கோடிக்கு கடனாக பணம் பெற்றுள்ளனர்.

ஆனால் வாங்கிய பணத்திற்கு வட்டியும் கட்டவில்லை. இதற்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டு நிதி நிறுவனத்தின் ஆண்டு கணக்குகளை சரிபார்த்த போது தான், ஆண்டோ ஸ்டாலினுக்கு போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.30 கோடி பணத்தை நிதி நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ் தனது இலங்கை நண்பர் சுதாகர், அவரது மனைவி பிரேமசுதா ஆகியோர் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் முன்னாள் அமைச்சரின் மகன் ஆண்டோ ஸ்டாலின் புகார் அளித்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், யாரும் கைது செய்யப்படாமல் இருந்தனர். இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் ரமேஷ் கைது செய்யப்பட்டார். ரமேஷ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் இலங்கை தமிழர் சுதாகர் தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார்.
அதை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இலங்கை தமிழர் சுதாகர், அவரது மனைவி பிரேமசுதா ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 116 போலி நிறுவனங்களுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மோசடியாக பெற்ற ரூ.30 கோடி பணம் குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் ரூ.30 கோடி இழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

