வயிற்று வலிக்கு எய்ட்ஸ் சிகிச்சை.. அதிர வைத்த அரசு மருத்துவமனை..!
வயிற்று வலிக்கு எய்ட்ஸ் சிகிச்சை.. அதிர வைத்த அரசு மருத்துவமனை..!

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 52 வயது விவசாயிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. இதையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த பிப்ரவரி 23-ம் தேதி சென்றுள்ளார்.
அவரை உள்நோயாளியாக அனுமதித்து, ரத்த பரிசோதனை உள்ளிட்டவைகள் எடுத்து சிகிச்சை அளித்துள்ளனர். பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்று உள்ளதாகக் கூறி 26-ம் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் எய்ட்ஸ் தொற்று அறிக்கையை வைத்து அவருக்கு எய்ட்ஸ் நோய்க்கான மருந்து, மாத்திரைகள் வழங்கி அதற்குரிய வழிமுறைகளின்படி பல நாட்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனாலும் அவருக்கு குணமடையாததால், எய்ட்ஸ் நோய் காரணமாகவும் வலி இருக்கலாம். அதற்கான மருந்தை முறையாக சாப்பிட்டு அது சரியானால் வலியும் குறைந்து விடும் வாய்ப்பு உள்ளது’ எனக் கூறி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
வீட்டிற்கு வந்த முதியவருக்கு மீண்டும் வயிற்று வலி அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்துள்ளனர்.
அங்கு அவருக்கு எய்ட்ஸ் தொற்று இல்லை என்று தெரிவித்து பித்தப்பை கல் உள்ளதாகக் கூறி அதற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அதன் பின்னர் உடல்நிலை சரியாகி அந்த முதியவர் வீட்டிற்கு வந்துள்ளார். எய்ட்ஸ் உள்ளதாக கூறியதால் கடந்த 2 மாதங்களாக மன வேதனைக்குள்ளான முதியவர் சொல்ல முடியாத அவதி அடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று காலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து மீண்டும் எய்ட்ஸ் பரிசோதனை செய்துள்ளார். அப்போது பரிசோதனை முடிவில் எய்ட்ஸ் இல்லை என்று வந்துள்ளது.
அங்கு பரிசோதனை செய்தவர்களிடம், 2 மாதங்களுக்கு முன்னர் தனக்கு எய்ட்ஸ் என்று அறிக்கை அளித்தீர்கள். இப்போது இல்லை என்கிறீர்கள்.
2 மாதத்தில் குணமடைந்து விட்டதா..? என்று கேட்டு, 2 மாத காலமாக நான் பட்ட வேதனை என்னவென்று தெரியுமா என்று கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.
இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டு, அதை வெளியில் சொல்ல வேண்டாம் கூறியுள்ளனர். இதனால் அவர் அங்கிருந்து வேதனையுடன் சென்று விட்டார்.
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் விவசாயிக்கு எய்ட்ஸ் என்று தவறான மருத்துவ பரிசோதனை அறிக்கை அளித்து சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

