பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் கார்டு!!
பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் கார்டு!!

பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதார் அட்டை வழங்கப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்றும், இதனால் கொரோனா பெருந்தொற்றின்போது அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து, பாலியல் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின்போது, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை தொடர்பான வாதங்கள் எழுந்தன.

அப்போது, பாலியல் தொழிலாளர்கள் எப்படி தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுகளை பெற முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது மத்திய அரசு, பாலியல் தொழிலாளிகளுக்கு எந்த ஆவணமும் இல்லாமல் ஆதார் கார்டு வழங்கப்படும் என தெரிவித்தது. அதனை ஏற்ற நீதிபதிகள் பாலியல் தொழிலாளிகள் குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைத்திருக்கும்படி தெரிவித்தனர்.

மேலும், மாநில அரசுகள் பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கவும், அடையாள விபரங்கள் ஏதும் கேட்காமல் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக புதிய அறிக்கையை அடுத்த 3 வாரங்களுக்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
newstm.in

