கைவிட்ட திரைத்துறை.. வறுமையுடன் போராடி உயிரிழந்த நடிகை ரங்கம்மா பாட்டி
கைவிட்ட திரைத்துறை.. வறுமையுடன் போராடி உயிரிழந்த நடிகை ரங்கம்மா பாட்டி

ரங்கம்மா பாட்டி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
வடிவேலு நடித்த கி.மு. என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'போறது தான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போப்பா' என்ற காமெடி இடம் பெற்றிருக்கும். அந்த காமெடி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த காமெடி காட்சியில் வடிவேலுவுடன் நடித்த பாட்டியின் பெயர் ரங்கம்மா. இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் ஆகும். சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வந்தார். எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் அடைந்தவர்.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இவர் குணச்சித்திர நடிப்பினை தாண்டி காமெடியில் மிகவும் பிரபலமடைந்தவர்.
எனினும் கதவு கூட இல்லாத சிறிய அறையில், ஒரே ஒரு கட்டிலுடன் எந்த வசதிகளும் இல்லாமல், ரங்கம்மா பாட்டி வாழ்ந்து வந்தார். அவருக்கு மொத்தம் 12 பிள்ளைகள், அதில் இரண்டு பேர் தான் இப்போது இருக்கின்றனர். அவர்களும் கஷ்டத்தில் இருக்கின்றனர். முன்பு மெரினா கடற்கரையில் விற்றுக் கொண்டிருந்த ரங்கம்மா பாட்டி அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால், வீட்டிலேயே பொருட்களை விற்று பிழைப்பு நடத்தினார். ஆனால் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கட்டிருந்தார்.

தனது நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த ரங்கம்மா பாட்டி, அன்னூரில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

