அவிநாசி அருகே கோர விபத்து.. சாலை தடுப்பில் பைக் மோதல்.. 2 இளைஞர்கள் பலி..!
அவிநாசி அருகே கோர விபத்து.. சாலை தடுப்பில் பைக் மோதல்.. 2 இளைஞர்கள் பலி..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் அருகே, பதிவு எண் பெறப்படாத ஒரு புதிய பைக்கில் 20 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் மையத் தடுப்பில் பைக் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், இதுகுறித்து திருமுருகன் பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போது, 2 இலைஞர்களும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தனர். அவர்களது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் ஓட்டி வந்த பைக் பதிவு எண் கூட பெறப்படாத புதிய வாகனம் என்பதால் விபத்தில் இறந்த இளைஞர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

