முதல்வர் ஸ்டாலினிடம் நடிகர் விவேக் மனைவி வைத்த கோரிக்கை..!!
முதல்வர் ஸ்டாலினிடம் நடிகர் விவேக் மனைவி வைத்த கோரிக்கை..!!

மனதில் உறுதி வேண்டும் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விவேக். மக்களைச் சிந்திக்க வைக்கும் வகையில் நகைச்சுவை கலந்த வசனங்களையும் பேசி ரசிக்க வைத்தார். நகைச்சுவையுடன் தனது படங்களில் சமூக கருத்துக்களை பேசி வந்த விவேக்கை மக்கள் அன்போடு சின்ன கலைவாணர் என்று அழைத்தனர்.
நடிப்பை தாண்டி பல லட்ச மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். இந்த நிலையில் கடந்த 2021- ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் திடீர் மரணம் அடைந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் மறைந்த திரைப்பட நடிகர் விவேக் மனைவி அருட்செல்வி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அளித்தார்.
ஏற்கெனவே மறைந்த நடிகர் விவேக் இல்லம் உள்ள சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் வைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு விவேக் பசுமை கலாம் அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் விவேக் மனைவி அருட்செல்வி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இது தொடர்பான கோரிக்கை கடித்தை அளித்தார்.

