கடந்த 21 வருடங்களாக மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வரும் முதியவர்..!!
கடந்த 21 வருடங்களாக மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வரும் முதியவர்..!!

தாய்லாந்து நாட்டைச் சேர்த்தவர் சார்ன் ஜன்வாட்சகல். முன்னாள் ராணுவ மருத்துவ உதவியாளரான இவர் தனது சின்னஞ்சிறிய வீடே உலகம் என வாழ்ந்து வந்திருக்கிறார். மிகவும் அவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே தனது வீட்டை விட்டு வெளியேவரும் வழக்கமுள்ள சார்ன், சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.
அப்போது அருகில் இருந்த பெட் காசிம் பாங்காக் அறக்கட்டளை இவருக்கு உதவ முன்வந்திருக்கிறது. இந்த அறக்கட்டளை ஊழியர் ஒருவர் சுமார் 2 மாதங்களுக்கு தாத்தாவுக்கு தேவையான உணவுகளை அவரது வீட்டிற்கே வந்து கொடுத்துவிட்டு செல்வது வழக்கம்.
சார்ன் தனது வீட்டில் நாய் மற்றும் பூனைகளை வளர்த்து வருகிறார். கான்கிரீட் வீடுதான் என்றாலும் வீட்டில் மின்சாரம் கிடையாது. மிகவும் பாழடைந்த இந்த வீட்டில் தனிமையில் வாழ்ந்துவந்த சார்னுக்கு அவரது செல்லப் பிராணிகள் தான் ஒரே துணை.

அண்டை வீட்டாருடன் தண்ணீரை பகிர்ந்துகொள்ளும் சார்ன் சமீபத்தில் பெட் காசிம் பாங்காக் அறக்கட்டளைக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் சார்ன் கூறிய விஷயத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
சார்ன் தனது மனைவியின் சவப்பெட்டியுடன் 21 ஆண்டுகள் வாழ்ந்துவந்திருப்பதை அறிந்த அதிகாரிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனைவியை விட்டு பிரிய மனம் இல்லாததால் அவருடைய சவப்பெட்டியை அடக்கம் செய்யாமல் அதனுடன் வாழ்ந்துவந்ததாகவும் சார்ன் கூறியிருக்கிறார். மேலும், மனைவிக்கு இறுதிச் சடங்குகள் செய்ய உதவவேண்டும் எனவும் சார்ன் அந்த அதிகாரிகளிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தற்போது தனக்கு வயதாகிவிட்டதால், ஒருவேளை தான் மரணமடைந்துவிட்டால், மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்யமுடியாமல் போய்விடும் என்பதால் தற்போது இந்த முடிவை எடுத்திருப்பதாக சார்ன் கூறியது அதிகாரிகளை திகைக்க வைத்திருக்கிறது.

இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, அறக்கட்டளை நிர்வாகிகளின் உதவியுடன் சார்ன் தனது மனைவிக்கு இறுதி சடங்கை செய்திருக்கிறார்.
அப்போது சார்ன், ‘இது தற்காலிக பிரிவு தான். நீ மீண்டும் வீட்டுக்கு வந்துவிடலாம். சத்தியமாக சொல்கிறேன். வெகுநாட்கள் நாம் பிரிந்திருக்க போவதில்லை’ என்று கண்கலங்கியபடி கூறியது பலரையும் கலங்க வைத்தது.

