‘அண்ணாத்த’, ‘மாஸ்டர்’ முதல் நாள் வசூலை முறியடித்த ‘வலிமை’..!
‘அண்ணாத்த’, ‘மாஸ்டர்’ முதல் நாள் வசூலை முறியடித்த ‘வலிமை’..!

ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2 வருட காத்திருப்பால் ‘வலிமை’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று (24-ம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம், பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்டது.
சென்னையின் முன்னணி தியேட்டரான ரோகிணி சில்வர் ஸ்கிரீனில், முதல் நாள் காட்சிகளுக்காக 23,000 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்றது என திரையரங்குகளின் மேலாளர் நிகிலேஷ் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“தேவி, சங்கம், ஈகா, ஆல்பர்ட் போன்ற சென்னை நகர மல்டிபிளக்ஸ் வளாகங்கள் அனைத்து திரைகளிலும் ‘வலிமை’ டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என, வர்த்தக கண்காணிப்பாளர் கவுசிக் பதிவிட்டுள்ளார்.
வெளியான முதல் நாளில் ‘வலிமை’ திரைப்படம் தமிழகத்தில் 36 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், சென்னையில் மட்டும் ரூ.1.82 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை வெளியான அஜித் திரைப்படங்களில் இதுவே அதிக வசூல் செய்த படமாகவும் கூறப்படுகிறது. அத்துடன், ரஜினி நடித்த ‘அண்ணாத்த’, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையையும் ‘வலிமை’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

