பிரபல நடிகர் மீது மேலும் ஒருபெண் பாலியல் புகார்.. நடிகர்கள் சங்கத்தில் இருந்து விலகினார்
பிரபல நடிகர் மீது மேலும் ஒருபெண் பாலியல் புகார்.. நடிகர்கள் சங்கத்தில் இருந்து விலகினார்

மலையாள திரைப்பட உலகில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் விஜய்பாபு. ஏராளமான படங்களை தயாரித்துள்ள சில படங்களில் நடிக்கவும் செய்து பிரபலமானவர். இந்த நிலையில், இவர் மீது தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை ஒருவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கொச்சி காவல் நிலையத்திலும் அப்பெண் அளித்த புகாரின்பேரில், போலீசார் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகர் விஜய்பாபு மீது மற்றொரு பெண் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அப்பெண், விஜய்பாபுவின் தயாரிப்பு நிறுவனத்தில் முன்பு பணியாற்றியவர். அதன் பேரில் எர்ணாகுளம் போலீசாரும் விஜய்பாபு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் பாலியல் புகார் கூறிய பெண்ணின் பெயரை வெளியிட்டதால் விஜய்பாபு மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். மேலும் அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா)வின் செயற்குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்பாபு தாமாக முன்வந்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தான் செயற்குழு உறுப்பினராக உள்ள அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை. , தான் குற்றமற்றவர் என்று தெரியவரும் வரை, செயற்குழுவில் இருந்து விலகி இருப்பேன் என்று விஜய் பாபு குறிப்பிட்டுள்ளார்.

அவரது கடிதம் அம்மா அமைப்பில் விவாதிக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in

