ஆசிய கைப்பந்து போட்டி.. இந்திய அணியில் அசத்தும் ஓசூர் அரசுப்பள்ளி மாணவி !!
ஆசிய கைப்பந்து போட்டி.. இந்திய அணியில் அசத்தும் ஓசூர் அரசுப்பள்ளி மாணவி !!

ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விளையாட ஓசூர் அரசுப்பள்ளி மாணவி ஜி.கோபிகா தேர்வு பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில் செயல்படும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோபிகா என்ற மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். கைப்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இவர், ஓசூரில் உள்ள ஈகிள்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்து கைப்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று வந்தார்.

அதைத் தொடர்ந்து பள்ளிகள் அளவில் நடந்த போட்டிகளில் திறமை வெளிப்படுத்தினார். இதன்பலனாக மாவட்ட, மாநிலம் மற்றும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் பங்கேற்று திறமையாக விளையாடி வந்தார். கைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி கோபிகா, நாளை முதல் 11ஆம் தேதி வரை கஜகஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள 21ஆவது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய கைப்பந்து அணியில் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாட தேர்வு பெற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து மாணவி கோபிகா இந்திய கைப்பந்து அணியில் இணைந்து பயிற்சி பெற்று வந்தார். தற்போது பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்து ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்திய கைப்பந்து அணியில் இணைந்து கஜகஸ்தான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். வெற்றியுடன் திரும்புவார் என்றும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
newstm.in

