அறுந்து கிடந்த மின் வயரை அகற்ற முயற்சி.. பெண் உட்பட 2 பேர் பலி.. ஒருவர் கவலைக்கிடம்..!
அறுந்து கிடந்த மின் வயரை அகற்ற முயற்சி.. பெண் உட்பட 2 பேர் பலி.. ஒருவர் கவலைக்கிடம்..!

புதுச்சேரி முத்தியால்பேட்டை எம்.எஸ்.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் செல்வி (58). இவரது மகள் சரண்யா (30). மகன் கணேசன் (22). தமிழரசியின் தங்கை தெய்வானை (45). இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று மாலை 6 மணியளவில் செல்வியின் வீட்டு வாசலில் மின் வயர் அறுந்து விழுந்து கிடந்தது. அப்போது, வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய கணேசன் அந்த வயரை ஓரமாக எடுத்துப் போட முயன்றதாக தெரிகிறது.
அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் அலறினார். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அவரது சித்தி தெய்வானை, அக்கா சரண்யா ஆகியோர் ஓடிவந்து பார்த்தனர்.
அங்கு, மின்சாரம் பாய்ந்து துடி துடிப்பதை பார்த்து பதற்றத்தில் கணேசனை அவர்கள் காப்பாற்ற அருகில் சென்றனர். உடனே தெய்வானை, சரண்யா ஆகியோரும் மின்சாரம் பாய்ந்து அலறினர்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் மின்துறை ஊழியர்கள் விரைந்து வந்து மின் விநியோகத்தை நிறுத்தினர்.
இதன்பின் கணேசன், தெய்வானை, சரண்யா ஆகியோரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்ததில் கணேசனும், தெய்வானையும் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சரண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

