சென்னை மக்களே கவனம்.. இந்தப்பக்கம் 2 நாள் போக்குவரத்து மாற்றம்..!
சென்னை மக்களே கவனம்.. இந்தப்பக்கம் 2 நாள் போக்குவரத்து மாற்றம்..!

கிண்டியில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக 2 நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பரங்கிமலை போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட கிண்டி ஜி.எஸ்.டி. சாலையில் ஹோட்டல் ஹப்லிஸ் அருகே உள்செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இன்று (9-ம் தேதி) மற்றும் நாளை (10-ம்) ஆகிய 2 நாட்களும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, விமான நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலையில் வரும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தில் மேலே நேராக சென்று (கிண்டி போகும் வழி செல்லாமல்) சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க. தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பஸ் நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம்.
பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதும் இன்றி வழக்கமான சாலையில் கத்திப்பாரா வழியாக செல்லலாம். வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் 100 அடி சாலை சிப்பெட் சந்திப்பில் இடது புறம் திரும்பி திரு.வி.க. தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பஸ் நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

