மக்களே கவனம்.. தமிழகத்தில் 2 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா..?
மக்களே கவனம்.. தமிழகத்தில் 2 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் தெரியுமா..?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை மற்றும் வரும் 27-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 25, 26, 28-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், 27-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (26-ம் தேதி) வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 27-ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.