Theme Check

கும்பகோணத்தின் முதல் மேயராகிறார் ஆட்டோ ஓட்டுநர்.. அதிருப்தியில் திமுகவினர் !!

கும்பகோணத்தின் முதல் மேயராகிறார் ஆட்டோ ஓட்டுநர்.. அதிருப்தியில் திமுகவினர் !!

கும்பகோணத்தின் முதல் மேயராகிறார் ஆட்டோ ஓட்டுநர்.. அதிருப்தியில் திமுகவினர் !!
X

தமிழகத்திலேயே இரண்டு மாநகராட்சிகள் கொண்ட மாவட்டமாக தஞ்சாவூர் உள்ளது. அந்த வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியில் முதன் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கும்பகோணம் மாநகராட்சிக்கு மொத்தமுள்ள 48 வார்டுகளில், திமுக 38 வார்டுகளில் வெற்றி பெற்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 வெற்றிபெற்றனர். மேலும், சுயேட்சையும், அதிமுகவினரும் தலா மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சியில் முதல் மேயர் பதவியை பெற திமுகவினர் கடுமையாக முயற்சி செய்து வந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் கும்பகோணம் மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணி ஒதுக்கீடு செய்தது.

congress kumbakonam mayor

கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டதில், இரண்டு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 18 -வது வார்டில் தேர்வு செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநரான சரவணனை மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணன். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளாக நகரத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி தேவி, மூன்று மகன்கள் உள்ளனர்.

congresskumbakonam mayor

இந்த நிலையில், முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஆட்டோ ஓட்டுநரான சரவணன் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரான சரவணன் மேயர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சியினரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கும்பகோணம் துணை மேயர் பதவி திமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துணை மேயர் வேட்பாளராக சு.ப. தமிழழகனை திமுக தலைமை அறிவித்துள்ளது. எனினும் மேயர் பதவி கிடைக்காததால் திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.


newstm.in

Next Story
Share it